கீழ் அரங்கத்தில் கலந்துரையாடல், மேலே செய்முறைப் பயிற்சி என்று வரையறுக்கப்பட்ட சென்னை பதிவர் பட்டறையில் வலை நன்னடத்தை என்ற தலைப்பில் விவாதம் என்ற போதே எங்களுக்குள் பல கேள்விகள் எழுந்தன.. ‘அந்தத் தலைப்பை அவசியம் பேசித்தான் ஆக வேண்டுமா?’, ‘பிரச்சனை செய்யவே வரக் கூடிய பலருக்கு இது வாய்ப்பாகிவிடாதா?’ என்ற கேள்விகள் எல்லா பக்கமும். வலைபாதுகாப்பு குறித்த பேச்சுக்கு ஒரு முன்னோட்டமாக இதுவும் இருந்தால் தான் முழுமையடையும் என்று தான் முடிவெடுத்து அதை அனுமதித்திருந்தோம்.
வலை நன்னடத்தை பேச ஒப்புக் கொண்டது முத்துகுமரன். உரைச்சாரமும் பெற்று வலையேற்றி விட்டிருந்தோம். பட்டறை அமைப்பாளர்களுக்கு ஒப்புதல் இல்லாத எந்தக் கருத்தும் இந்த முன்னுரைச் சாரத்தில் இருக்கவில்லை..
பட்டறை நிகழ்வுக்கு முதல் வாரம் சந்தித்த போது கூட இந்தத் தலைப்பைக் குறித்த விவாதத்தைப் பற்றிய பயம் எங்களுக்கு இருந்தது.. இந்த விவாதம், புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு பயமேற்படுத்தும் விதமாக சோதனைகளை எல்லாம் இழுத்துக் கொண்டு விட்டுவிடக் கூடாதே என்ற பயமும், அது போன்ற திசை திருப்பல்களை எப்படி கையாள வேண்டும் என்ற திட்டமிடலும் இருந்தது.
சற்றும் எதிர்பாராத விதமாக முத்துகுமரனால் கலந்துரையாடலுக்கு வர இயலாமல் போனது. சனிக்கிழமை(ஆகஸ்ட் 4) மாலை, அவசரத்தில் வருகைப் பதிந்தவர்களில் ஒவ்வொருவரையாக கேட்கவும், மாலன் இந்த தலைப்பில் பேச ஒப்புக் கொண்டார்
விவாதம் தொடங்கிய போது “அரசியல் கொள்கை விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என்று பிறரை மட்டுறுத்திய ஒருவரே, தன்னுடைய நுண்ணரசியல் விளையாட்டுக்கு பட்டறை மேடையைப் பயன்படுத்திக் கொள்வார் என்பது சற்றும் எதிர்பாராதது.. எதிர்பார்த்த சர்ச்சைகள் இல்லாமல், புதிய பிரச்சனையாக ஈழத்துத் தமிழரின் நன்னடத்தை பற்றிய பேச்சு கிளம்பியதில், அரங்கத்தில் மட்டுறுத்தலுடன் பிற பொறுப்புகளையும் சேர்த்து நிர்வகித்துக் கொண்டிருந்த அமைப்பாளர்கள் ஒரு நிமிடம் திகைத்து, பிரச்சனை புரிந்து, அந்த வகையிலான உரையாடல் தொடராமல் தடுக்க மட்டுமே செய்ய முடிந்தது.
ஈழச் சகோதரர்களுக்கு மனவருத்தம் நேரும் வகையிலான பேச்சை, புதியவர்களும் மாணவர்களும் கூடியிருக்கும் பதிவர் பட்டறை அவைக்களத்தில் கேட்க நேரிட்டதற்காக அங்கேயே அப்போதே மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது, அமைப்பாளர்களாகிய எங்களின் கடமையே என்பதைக் கண்டிப்பாக உணர்கிறோம். அந்த நேர திகைப்புக்கும், இது போன்ற நிகழ்வுகளைக் கையாளும் பழக்கமற்ற தன்மைக்கும் எங்களைப் பறிகொடுத்துவிட்ட தவறு புரிகிறது.
இது போன்ற நிகழ்வுகள் இனி நேராமல் தடுக்க இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு அனுபவமாக ஆகி விட்டது என்ற போதிலும், சொந்த சகோதரர்களின் வருத்தத்தைச் சம்பாதிக்கும் விதமாக சிதறவிட்டுவிட்ட சொற்களுக்காக இன்று எங்களின் மன வருத்தங்களைப் பகிர்ந்து நிற்கிறோம்.. மன்னிப்பீர்களா சகோதரர்களே?! ….
ஈழத்தவரின் கடவுச்சீட்டு குறித்தும், சக பதிவர் -/பெயரிலி குறித்தும் கூறப்பட்ட கருத்துக்கள், பேச்சாளரின் சொந்த கருத்தே என்பதையும், உரையின் அந்தப் பகுதியை அனுமதித்தமைக்காக எங்களின் வருத்தங்களையும், சென்னை வலைப்பதிவர் பட்டறையின் அமைப்பாளர்களாக பதிவு செய்து கொள்கிறோம்…